வித்தியாசங்களற்ற ஊடக வரிசையில் வித்தியாசமான முயற்சி புதுயுகம்.

புதுமையான வடிவங்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களை அடுத்தடுத்து அள்ளிவழங்க புதிய முகத்துடன் வலம் வருகிறது புதுயுகம். இது ஒரு தொலைக்காட்சி அல்ல. ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கை அனுபவங்களை காட்சிப்பதிவுகளாக்கி கேளிக்கை குறையாமல் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த அலைவரிசை..

பொழுதுகள் போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் காலை முதல் இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன குழந்தைகள், விடலைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் ஊடக அறம் பிறளாமல் நிகழ்ச்சிகள் பின்னப்பட்டுள்ளன.

நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் என்று அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன. நம்ம வீட்டுப் பெண்களை அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் எண்ணமும் புதுயுகத்திற்கு இல்லை. நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை இருக்கும், பொழுதுபோக்கு இருக்கும், கொண்டாட்டம் இருக்கும் அதே சமயத்தில் வாழ்க்கை மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் இருக்கும். இந்த உண்மைகளை உணரவேண்டுமெனில் புதுயுகத்தை பாருங்கள் அனுபவியுங்கள்.